19.9 C
Scarborough

‘ஆர்சிபி பிளே ஆஃப் வேட்கையில் விளையாடுகிறது’ – இயன் மோர்கன்

Must read

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று (மே 3) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜியோ ஸ்டார் நிபுணரான இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் கூறியதாவது:

சிஎஸ்கே அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. தக்க வைக்கப்பட்ட சீனியர் வீரர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களிடம் இருந்தும் எந்தவித செயல் திறனும் வெளிப்படவில்லை. ஷிவம் துபே, பதிரனாவும் கூட சிறப்பாக செயல்படவில்லை.

இந்த சீசனில் அவர்களது பந்து வீச்சு பரவாயில்லை. ஆனால் பேட்டிங் பெரிய அளவில் கவலை அளிக்கும் வகையில் இருந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் வரை சிஎஸ்கே அணி நெருங்கியது. ஆனால் பீல்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற ஒருவருக்கு கேட்ச்சை தவறவிட்டால் வெற்றி பெறுவது எளிதாக இருக்காது.

அதேவேளையில் ஆர்சிபி பல விஷயங்களை சரியாக செய்துள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்த ஆண்டு நான் மிகவும் ரசித்த விஷயங்களில் ஒன்று, விராட் கோலியுடன் பில் சால்ட் தொடக்க வீரராக களமிறங்கியதைதான். கடந்த சில ஆட்டங்களில் பில் சால்ட் இடம் பெறாவிட்டாலும் அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் உள்ளே வந்தார்.

டாப் ஆர்டரில் காட்டிய ஆக்ரோஷம் நடுவரிசை பேட்டிங் வரிசையும் அதே மனநிலையை எடுத்துச் செல்ல அனுமதித்தது. இது எப்போதும் ரன்களின் அளவைப் பற்றியது அல்ல, ஆனால் அவர்கள் எவ்வாறு வேகத்தை உருவாக்கினார்கள் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக வெளி மைதானத்தில் விளையாடி விட்டு பின்னர் சின்னசாமி மைதானத்துக்கு திரும்பி வந்து தங்கள் முதல் வெற்றியைப் பெற்றனர்.

ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. உலகின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அவர், தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக மாறியுள்ளார். நீங்கள் ஆர்சிபி ரசிகராக இருந்தால் உற்சாகப்படுத்த நிறைய இருக்கிறது. இம்முறை ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வேட்கையில் விளையாடுகிறார்கள் என இயன் மோர்கன் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article