‘கிங்டம்’ திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.
“கதையை பெரிதாக்கி இரண்டு பாகமாக உருவாக்கவில்லை. அப்படத்தின் கதையிலேயே இரண்டு பாகத்துக்கான விஷயங்கள் இருந்தன. ‘கிங்டம்’ படத்தில் பிரம்மாண்டம், திரைக்கதை, சண்டைக் காட்சிகள் என அனைத்துமே இருக்கும். முதல் பாகத்தின் வெற்றியை வைத்து 2-ம் பாகம் முடிவு செய்யப்படும். ‘கிங்டம் ஸ்கொயர்’ அல்லது ’கிங்டம் பாகம் 2’ என பெயரிடலாம் என இருக்கிறோம்” என்று நாக வம்சி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
நாக வம்சி மற்றும் சாய் செளஜான்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிங்டம்’. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடித்துள்ளார். இதன் ஒளிப்பதிவாளர்களாக ஜோமன் டி ஜான் மற்றும் கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் மே 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.