சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்ட அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த அணியாக சாதனை படைத்தது.
சிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலாவது மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கடந்த 2018இல் விளையாடியது. இதன் பிறகு 2023ஆம் ஆண்டு வரை அயர்லாந்து அணி தொடர்ந்து விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து அந்த அணி தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் வெற்றி பெற்றது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது. வெறும் 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அயர்லாந்து அணி ஹெட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென்னாபிரிக்க அணி 14 போட்டிகளில் ஹெட்ரிக் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.