நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக்கூட்டம் வியாழக்கிமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தியும், பொழுதுபோக்கு வரி உயர்வைக் கண்டித்தும் ஜூன் 1ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது படப்பிடிப்புகள் நடைபெறாது, திரையரங்குகள் மூடப்படும், சினிமா தொடர்பான எந்த நிகழ்வும் நடைபெறாது என கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.சுரேஷ் குமார் தெரிவிக்கையில், “ஜி.எஸ்.டியுடன் கூடிய பொழுதுபோக்கு வரியை மாநில அரசு அதிகரித்துள்ளது. வரிகுறைப்பு தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்களின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புதிதாக வரும் நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள். அவர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 10 சதவிகிதம் கூட தியேட்டரில் வசூல் இல்லை. தயாரிப்புச் செலவு அதிகரிக்கிறது. என தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பல படங்கள் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. ஓடிடி நிறுவனங்கள் அனைத்துப் படங்களையும் வாங்குவதில்லை. இதற்கு ஒரு முடிவை எட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்” என்றார்.