ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும், தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (06) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இலங்கைக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி. அணி இலங்கை அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டாவதும், இறுதியுமான போட்டி இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை சமநிலைப்படுத்தும் முனைப்பில் உள்ளது. இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற வோர்ன் – முரளி கிண்ண டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸி. அணி வெற்றிபெற, இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியது.
இதேவேளை இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுவரையில் இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள திமுத் கருணாரத்ன, தனது 100 டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை அணியில் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெற்ற திமுத் கருணாரத்ன இதுவரையில் 50 ஒருநாள் மற்றும் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் திமுத் கருணாரத்ன 7,172 ஓட்டங்களுடன் 4வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இலங்கை கிரிக்கெட் அணி திமுத் கருணாரத்னவை வெற்றியுடன் வழியனுப்புவதுடன், தொடரையும் சமநிலைப்படுத்த காத்திருக்கிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததன் பின்னர் ஒருநாள் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகிறது.