9 ஆவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள நிலையில் போட்டிக்கான அனைத்து ஒன்லைன் டிக்கெட்களும் ஒரு மணி நேரத்தில் விற்பனையாகின.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்துக்கான ஒன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.9,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
இதில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்துக்குள் ஒன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. இருப்பினும் டுபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்துக்குள் அந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.