நடப்பு ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் தகுதிபெற்றுள்ளார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் (செர்பியா) கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6:4 என்ற புள்ளிக்கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் ஆட்டத்தின் அடுத்த மூன்று செட்களை 6:4, 6:3, 6:4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
இதன்மூலம் அல்காரஸை வீழ்த்திய ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். நாளை (24) நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் உடன் மோத உள்ளார்.