நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆரம்பமானது. 15 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும்.
இதில் நடப்பு சம்பியன்களான, ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னர், மகளிர் பிரிவில் அரியனா சபலென்கா ஆகியோர் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளனர். இத்தாலியின் ஜேக் சின்னர் மீது இரு தடவைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீண்டும் பட்டம் வெல்ல தயாராகி வருகிறார்.
கடந்த 2024-இல் ஆஸி. ஓபன் பட்டத்தையும், யு.எஸ் ஓபன் பட்டத்தையும் வென்றிருந்தார் ஜேக் சின்னர். உலகின் நம்பர் 1 வீரராகவும் திகழ்கிறார். மூன்று முறை ஆஸி. ஓபன் இறுதிக்கு தகுதி பெற்ற ரஷ்ய வீரர் டெனில் மெத்வதேவ், ஸ்பெயின் நட்சத்திரம் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் கார்லோஸ் அல்கராஸ், 10 முறை ஆஸி. ஓபன் சம்பியன் ஜோகோவிச், உலகின் 2-ஆம் நிலை வீரர் அலெக்ஸ் வெரேவ் ஆகியோரும் களம் காண்கின்றனர்.
மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரியனா சபலென்கா ஹெட்ரிக் சம்பியன் பட்டத்தை வெல்லும் தீவிரத்தில் உள்ளார். மார்ட்டினா ஹிங்கிஸ் (1997-99) போன்று ஹெட்ரிக் பட்டத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சாதனை படைத்தால் மார்க்ரெட் கோர்ட், கூலாகேங், ஸ்டெஃப்பி கிராஃப், மோனிஸா செலஸ் வரிசையில் இடம் பெறுவார்.
உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை கோகோ கௌஃப், 2020 ஆஸி ஓபன் சம்பியன் சோபியா கெனின், இரண்டாம் நிலை வீராங்கனை ஸ்வியாடெக், எலனா ரைபக்கினா, 8-ஆம் நிலை வீராங்கனை எம்மா நவ்ரோ ஆகியோரும் தங்கள் திறமையை நிரூபிக்க காத்துள்ளனர்.