உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா – ஓமன் இடையிலான ஒரு ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் துடுப்பாட்டம் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்டது.
அடுத்து 123 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக குறைந்த புள்ளியை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ஓட்டங்களில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டு கால சாதனையாக அமெரிக்கா முறியடித்தது.
மேலும், ஓமன் தரப்பில் 5 பவுலர்களும், அமெரிக்கா தரப்பில் 4 பவுலர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடந்த ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.