விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் லக்னோ அணி பேட் செய்து 209 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். லக்னோ அணிக்காக எய்டான் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
ஆரம்பம் முதலே மார்ஷ் அதிரடியாக ஆடினார். மார்க்ரம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 72 ரன்களை விளாசினார் மார்ஷ். 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது பேட்ஸ்மேனாக நிக்கோலஸ் பூரன் களம்கண்டார். அவரும் அதிரடியாக ஆடினார். 30 பந்துகளில் 75 ரன்களை அவர் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்.
அங்கிருந்து லக்னோ அணியின் ரன் குவிப்பு வேகம் சரிந்தது. ஆயுஷ் பதோனி 4, ஷர்துல் தாக்குர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை எடுத்திருந்தது லக்னோ. அடுத்த 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை லக்னோ இழந்தது.
19-வது ஓவரில் ஷாபாஸ் அகமது 9 ரன்களில் அவுட் ஆனார். ஸ்டார்க் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் ரவி பிஷ்னாய் போல்ட் ஆனார். மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. அந்த ஓவரில் டேவிட் மில்லர் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ. இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு 210 ரன்கள் தேவை. இந்த இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் டெல்லி அணி சிறப்பாக கம்பேக் கொடுத்திருந்தது. அதற்கு காரணம் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள்.
டெல்லி அணியின் குல்தீப் யாதவ், அபாரமாக பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் 3 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்திருந்தார்.