இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் 36 வயதான இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருடன் இந்த சீசன் கிரிக்கெட் முடிவடைகிறது. அதன்பின் 2025-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் தொடங்க இருக்கிறது. இந்திய முதல் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
அதன்பின் 2027ஆம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறது.
இதனால் 36 வயதான விராட் கோலியை மேலும் இரண்டு வருடத்திற்கு பிசிசிஐ அணியில் வைத்திருக்குமா? அல்லது விராட் கோலி ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு பிசிசிஐ விராட் கோலிக்கு அதிக நெருக்கடி கொடுக்காது எனத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி நீடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான் ஒரு நிகழ்ச்சியில் விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது “தற்போது இருக்கும் நிலையில், உங்களின் அடுத்த பெரிய இலக்கு என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விராட் கோலி “அடுத்த பெரிய இலக்கா… எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, 2027ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல முயற்சி செய்வதாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறமாட்டார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை. அதேவேளையில் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.