போர் நிறுத்தத்துக்கான 20 அம்ச திட்டம் தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற கேள்விக்கு, இல்லை என டிரம்ப் பதிலளித்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். அவர், டிரம்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.
வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான சாத்தியமும் அதிகரித்து உள்ளது.
காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது.
டிரம்புக்கு எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. மேற்படி திட்டத்துக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,
இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் எனக் குறிப்பிட்டார்.
எனினும், இந்த திட்டங்களை பற்றி ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார்.
ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்குமோ அல்லது இல்லையோ என்பதற்கு அப்பால் ஏற்காவிட்டால் அது வருத்தம் தரும் முடிவாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்துள்ளார்.
அவ்வாறு இல்லையேல் நரகத்திற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கும் வகையில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
காசா திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.