நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார் 40 வயதான ரொனால்டோ.
அண்மையில் 2027 ஆம் ஆண்டு வரையில் விளையாடும் வகையில் அவரது ஒப்பந்தத்தை அந்த அணி புதுப்பித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காதது குறித்து ரொனால்டோ பேசியுள்ளார்.
அல்-நசர் கிளப் அணி இந்தத் தொடரில் பங்கேற்க தகுதி பெறவில்லை. இருப்பினும் ரொனால்டோ இந்த தொடரில் பங்கேற்க ஃபிபா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. இதே தொடரில் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார்.
“கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாட எனக்கு சில ஆஃபர்கள் வந்தன. ஆனால், அது அர்த்தமற்றது என நான் கருதினேன். அதனால் சிறந்த முறையில் ஓய்வு எடுக்க முடிவு செய்தேன். ஏனெனில், இந்த சீசன் மிகவும் பெரியது. உலகக் கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. இதற்கு சிறந்த முறையில் தயாராக ஓய்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.