ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “ரோகித் சர்மா, விராட் கோலியின் அனுபவம் மிகவும் முக்கியமானது. சீனியர்களான அவர்கள் இருவரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுடன் இணைந்து தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம்.
சுப்மன் கில் உண்மையிலேயே நன்றாக செயல்படுகிறார். ஆனால் அவருக்கு ரோகித், கோலி போன்ற அனுபவ வீரர்கள் தேவை. அவர்கள் இருவரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்று இருக்கிறார்கள்.
விராட் கடந்த ஐ.பி.எல். கோப்பையை வென்றார். அத்துடன் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் கேப்டன்ஷிப்பிலும் அசத்திய அவர்கள் இந்த இளம் இந்திய அணியின் ஓய்வறையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
அத்துடன் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது சிராஜ் 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.