இலங்கைப் பொருட்கள் மீதான அமெரிக்க பரஸ்பர வரி விகிதங்களை சமீபத்தில் குறைத்ததை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார், அதே நேரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் முழு விபரங்களையும் வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
‘X’ எக்ஸ் தளத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்,
“அமெரிக்க வரி விகிதங்களை 20% ஆகக் குறைத்தமைக்காக வாழ்த்துக்கள், இந்த வரி குறைப்பு இப்போது வியட்நாம் மற்றும் பங்களாதேஷுடன் எங்களை இணைக்கிறது, மேலும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான அதன் விவாதங்களில் விடாமுயற்சியுடன் இருந்ததற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நான் வாழ்த்துகிறேன்”
இருப்பினும், வரிச் சலுகைக்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளைச் சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
“கட்டணக் குறைப்புகளைப் பெறுவதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ‘அர்த்தமுள்ள வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்’ குறித்து அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,”
இலங்கை ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்கும் உலக சந்தையில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் உள்ள அவசியத்தை ஒப்புக்கொண்டாலும், அத்தகைய சர்வதேச ஒப்பந்தங்கள் நாட்டின் இறையாண்மையை சமரசம் செய்யக்கூடாது என்று நாமல் ராஜபக்ஷ எச்சரித்தார்.
“சர்வதேச பங்காளிகளுடன் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் வெளிப்படையானவை என்பதையும், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்காததையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்த விபரங்களையும் எட்டப்பட்ட நிபந்தனைகளையும் பொதுமக்களுக்கு வெளியிடுமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இலங்கைப் பொருட்களுக்கான வரிகளை 44% இலிருந்து 20% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.