நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரொஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு சமாவோ அணிக்காக களமிறங்க முடிவு செய்துள்ளார் ரொஸ் டெய்லர்.
ரொஸ் டெய்லரின் தாயார் லோட்டி, சமாவோ நாட்டில் பிறந்தவர் ஆவார். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் ஓமனில் நடைபெறுகிறது. இதில் சமோவா அணி, பப்புவா நியூ கினியா அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் ரொஸ் டெய்லர் சமோவா அணிக்காக களமிறங்க உள்ளார்.
நியூஸிலாந்து அணிக்காக அவர், 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டி, 102 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தார்.
41 வயதான ரொஸ் டெய்லர் டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,683 ஓட்டங்கள் குவித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் 8,607 ஓட்டங்களும், சர்வதேச டி 20 போட்டிகளில் 1,909 ஓட்டங்களும் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .