இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’ என்றே அழைக்கப்பட்டது. இந்தியில் மட்டும் ‘மஜதூர்’ என்று தலைப்பை இறுதி செய்தது படக்குழு. இந்த தலைப்புக்கு இணையத்தில் பலரும் மிகவும் சாதாரணமாக இருப்பதாக விமர்சனம் செய்தனர்.
இதனை பலரும் இணையத்தில் தெரிவிக்கவே, உடனடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி தலைப்பை மாற்றிவிட்டது. இந்திப் பதிப்புக்கு ‘கூலி – தி பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இது இணையவாசிகளை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பெயர் மாற்றத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய எக்ஸ் தள பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.