13.2 C
Scarborough

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஸ்பெயின், செர்பியா, பெலாரஸ் வீரர்கள்4 ஆம் சுற்றுக்கு முன்னேற்றம்

Must read

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 32-ம் நிலை வீரரான இத்தாலியின் லூசியானோடார்டெரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-3), 6-7 (9-11), 6-4, 6-4 என்ற செட்கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்மையும், 7-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-7 (4-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கிரேட்பிரிட்டனின் கேமரூன் நோரியையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர். 6-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார்.

இதில் அட்ரியன் மன்னாரினோ 3-6, 6-3, 4-6, 6-4என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஷெல்டன் விலகினார்.

இதனால் அட்ரியன் மன்னாரினோ 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீராங்கனையான கனடாவின் லெய்லா பெர்னாண்டஸையும், 4-ம் நிலைவீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 7-5 என்றசெட் கணக்கில் பெலாரஸின் விக்டோரியா அசரன்காவையும், 9-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

5-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 5-7, 2-6 என்ற கணக்கில் 139-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டிடமும், 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-7 (4-7), 1-6 என்ற செட் கணக்கில் 60-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவாவிடமும், 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 62-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா க்ரெஜிகோவாவிடமும் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article