சிகிரியா மற்றும் கல்கமுவ பகுதிகளில் சமீபத்தில் பதிவான காட்டு யானைகளின் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து, காட்டு யானைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் உள்ளூர் பொலிஸாரின் உதவியைக் கோரியுள்ளது.
காவல் துறையின் பதில் தலைவருக்கு எழுதிய கடிதத்தில்,தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு உதவ குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் குற்றவியல் அதிகாரிகளின் (SOCO) அவசர உதவியைக் கோரியுள்ளது.
சிகிரியாவின் திகம்பத்தன பகுதியில் நடந்த யானை உயிரிழப்புக்களில் ஒன்று பிப்ரவரி 3, 2025 அன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கு தற்போது தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
பின்னர் அதே வனவிலங்கு காப்பகத்திற்குள் இரண்டு யானைகள் உயிரிழந்து கிடந்தன. அதில் ஒன்று நீண்ட தந்தங்களை கொண்ட யானை என கண்டறியப்பட்டது.அதன் தந்தங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
சமீபத்திய யானை இறப்புகள் குறித்து நேற்று (22) வனவிலங்கு அதிகாரிகளால் அவதானம் செலுத்தப்பட்டது. கல்கமுவவின் எஹெட்டுவெவ பகுதியில் இறந்த யானை தொடர்பான மற்றொரு சம்பவம் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளளது.
மாத்தளை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குள் முறையே சிகிரியா, கணேவல்பொல மற்றும் கல்கமுவ முழுவதும் யானை இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.