கடல் மார்க்கத்தின் ஊடாக தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தனுஷ்கோடி எல்லை பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (28) கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்திய கடலோர காவல்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் சிங்களவர் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மூவரில் ஒருவர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் என்றும் மற்ற இருவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மூவரும் வெள்ளிக்கிழமை இரவு 2 லட்சம் ரூபாய் பணத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.