தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தபால் ஊழியர்கள் இன்று (24) மாலை 4.00 மணி முதல் மீண்டும் பணிகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளுக்குத் திரும்ப தொழிலாளர்கள் சம்மதித்துள்ளதாக அவர் கூறினார்.
“தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை விவாதிக்க அரசாங்கம் தயாராக இல்லை, எனினும்மீதமுள்ள 17 கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தயாராக உள்ளது என்று நாங்கள் கருதினோம்,” என்று அவர் கூறினார்.
“எதிர்வரும் திங்கட்கிழமை முதல், மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் கைரேகை வருகை முறைகள் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மார்ச் முதல் அமலுக்கு வரும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட மேலதிக நேரக் கட்டண விதிமுறைகள் மாற்றங்கள் இன்றி செயல்படுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“எனவே, இன்று மாலை 4.00 மணி முதல், அனைத்து தொழிற்சங்கங்களும் பணிக்கு செல்ல ஒப்புக்கொண்டு, தங்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.