மியான்மர் ராணுவத்தின் தாக்குதலால் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் இராணுவ எதிர்ப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மார் வந்தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்குள்ள பல ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் எதிர்ப்புப் படைகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரக்கைன் மாகாணத்தில் உள்ள 2 பாடசாலைகள் மீது 500 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை மியான்மர் ராணுவம் வீசி தாக்குதல் நடத்தியதாக ‘அராகன் ஆர்மி’ கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாடசாலை விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் 19 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் 15 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இராணுவமே பொறுப்பு கூற வேண்டும் என்று போராளிகள் கூறியுள்ளனர்.