சென்னை: உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தது பரபரப்புச் செய்தியான நிலையில், அந்தச் சம்பவம் குறித்து கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.
நடந்தது என்ன? – ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. கவுரிக்கு ஆதரவாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், அவர் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கவுரியின் விளக்க அறிக்கை: “எனது தொழில்நிமித்தமாக நான் பொதுவெளியில் விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடும் என்பதை நானறிவேன். ஆனால் எனக்கான கேள்விகளோ அல்லது என் மீதான விமர்சனங்களோ எனது உடல் / தோற்றம் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ முன்வைக்கப்பட்டால் அது பொருத்தமற்றது. அன்றைய தினம், நான் எனது படத்தைப் பற்றி, பணிகள் பற்றிய கேள்விகளையே எதிர்பார்த்தேன். ஆனால் மாறாக, என்னிடம் அப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது. அதேபோன்ற கேள்வியை ஒரு ஆணிடம் கேட்பார்களா என்று தெரியவில்லை. அதுவும் என்னிடம் கேள்வி கேட்ட அதே கெடுபிடியான தொணியில் கேட்பார்களா என்பதும் தெரியவில்லை.
அந்தக் கடினமான தருணத்தில் நான் எனக்காக வலுவாக நின்றதில் பெருமை கொள்கிறேன். அது எனக்கு மட்டுமல்ல; என்னைப் போன்ற நெருக்கடியை சந்திக்கும் எவருக்கும் முக்கியம். மேலும் இதுபோல் உருவக்கேலியை பொதுப்படையான விஷயமாக ஆக்குவது ஒன்றும் புதிதல்ல. அதேபோல் இங்கே இதுதான் அழகு என்றொரு போலி பிம்பமும் கட்டமைக்கப்படுகிறது. எனக்கு அன்று நடந்தது இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் உதாரணம். நமக்கு அசவுகரியமோ, அநீதியோ இழைக்கப்படும் போது நாம் நமக்காக கேள்வி கேட்க வேண்டும். அதுதான் இந்த மோசமான சுழற்சியை உடைக்கும்.
அதேபோல், இந்தச் சம்பவத்துக்கான எனது எதிர்வினையைக் கொண்டு என்னை கேள்விகேட்ட அந்த நபரை தனிப்பட்ட முறையில் குறிவைக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். மாறாக இப்பிரச்சினையை நாம் கூடுதல் உணர்திறனுடன், அனைவரின் மீதும் மதிப்பு, பச்சாதாபத்துடனும் அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குக் கிடைத்த இந்த ஆதரவுக்காக நன்றி சொல்கிறேன். இத்தகைய பேராதரவை நான் எதிர்பார்க்கவில்லை. நெகிழ்ந்து போயுள்ளேன். சென்னை பத்திரிகையாளர் மன்றம், மலையாள திரையுலக சங்கம் (அம்மா) மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிக்கைகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். திரைத்துறையில் எனக்காக குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி. எனது சகாக்கள், நண்பர்கள், சக நடிகர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
hindutamil

