தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, தற்போதுள்ள எரிபொருள் மாபியாவை ஒழித்து மாற்றத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த மாற்றம் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது.
எரிபொருள் மாபியாவை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துள்ளது. கூரைகளின் மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளுக்கான கட்டணம் ஒரு கிலோவாட் மணிக்கு ரூ.37 இல் இருந்து ரூ.20 ஆக 45% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
இது சூரிய சக்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை அல்ல. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நோக்கித் திரும்பும் பலரை அதனை விட்டு விரட்டியடிக்கும் நடவடிக்கையாக அமைந்து காணப்படுகிறது.
அவ்வாறே இது எரிபொருள் ஆற்றல் மாபியாவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அவர் இன்று (21) விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஏராளமான சிறிய மட்ட தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சூரிய ஆற்றல் தொழில்முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுமார் 1,000 தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 40,000 க்கும் மேற்பட்ட மக்களை இந்த சூரிய சக்தி பேனல் கட்டணம் மோசமாகப் பாதித்துள்ளது. அவர்களின் தொழில்களும் கேள்விக்குறியாக மாறிவிட்டன. முழுத் துறையும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.