புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நுகர்வோருக்கு அநீதி இழைக்கும் வகையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்களை காட்சிப்படுத்தாத வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான முறைகேடுகளால் பாதிக்கப்படும் நுகர்வோர், இது குறித்து உடனடியாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

