கடந்த மாதம் பிரம்ப்டன் நகரில் இரண்டு வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், குறித்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பீல் பொலிஸார் நேற்று சனிக்கிழமை குறித்த காட்சிகளை வெளியிட்டனர், அதில் ரோலிங் ஏக்கர்ஸ் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் முகமூடி அணிந்த ஒருவர் நான்கு முறை துப்பாக்கியால் சுடும் காட்சிகளும், மற்றொருவர் அவரை படம் பிடிப்பதும் பதிவாகியுள்ளது.
சம்பவங்களில் எவரும் காயமடையவில்லையெனினும் இதற்கிடையில், சந்தேக நபர்கள் கருப்பு கிரைஸ்லர் 300 செடானில் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த வாகனம், சந்தேக நபர்களில் ஒருவருடன், வின்னிபெக்கில் வைத்து வின்னிபெக் காவல் சேவையின் குற்றப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் வின்னிபெக்கிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். அவர் 23 வயதான குர்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மற்றொரு சந்தேக நபரான 20 வயதான ஹுசந்தீப் சிங், ஜூலை 27 அன்று மிசிசாகாவில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தின் போது கைது செய்யப்பட்டார். அவர் மீது துப்பாக்கியை வேண்டுமென்றே பயன்படுத்தியதாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேக நபர்கள் இருக்கலாம் என்று நம்புவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் 905-453-2121 என்ற நீட்டிப்பு 2233 என்ற எண்ணில் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் அல்லது 1-800-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்பாளர்களை அநாமதேயமாக தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.