ஈரானுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தங்கி இருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள், கடந்த 16 நாட்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் சமீபத்தில் போர் நடந்தது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக் கூறி இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தியது.ஈரானும் அவர்களுக்கு பதிலடி வழங்கியது.
அதன் பின், இலக்குகளை எட்டிவிட்டதாகக் கூறி போரை நிறுத்த இஸ்ரேலிடம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இதை ஈரானும் ஏற்றது. 12 நாட்கள் நீடித்த மோதல் கடந்த ஜூன் 24ல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடங்கிய நாளிலிருந்து ஈரானில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள, தன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஈரான் அரசு தீவிரப்படுத்தியது.
கடந்த 9ம் திகதி வரை, 5 லட்சத்து 8 ஆயிரத்து 426 ஆப்கானிஸ்தானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்தது.
சமீபத்திய ஆண்டுகளில் இடம்பெற்ற மக்களின் கட்டாய வெளியேற்றங்களில் இதுவே மிகப் பெரியது என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த ஆப்கானியர்கள், ஈரானின் முக்கிய நகரங்களான டெஹ்ரான், இஸ்பஹான் ஆகிய இடங்களில் கூலி வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள். அதில் சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்று, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.
இதனால், புலம்பெயர்ந்த ஆப்கானியர்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி அவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.
இதனால், குடும்பத்துடன் ஈரானில் வசித்த பெண்கள், குழந்தைகள் தற்போது வீடுகளை இழந்து, ஆப்கானிஸ்தானின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.