உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்ற பங்களாதேஷ் அணியின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது.
பங்களாதேஷில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதனால் இரு நாடுகளின் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பி.சி.சி.ஐயின் கோரிக்கையை ஏற்று, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த செயலுக்கு பங்களாதேஷ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு மேலும், டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பங்களாதேஷ் அணி வராது என்றும் தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல், டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறு ஐ.சி.சி.க்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியது.
இந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டவணைப்படி, பங்களாதேஷ் அணி இந்தியாவில் தான் விளையாட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், புள்ளிகளை இழக்கநேரிடும் என்று எச்சரித்துள்ளது.
இதேவேளை ஐ.சி.சி.யிடம் இருந்து இதுபோன்ற எந்த அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

