இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கெப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பீர்கள் என ரோகித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டிகளில் நாணய சுழற்சியின் போது, ரோகித் சர்மாவை நான் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் நாணயம் சுண்டப்படும்போது, பேசுவதற்கு அதிக நேரம் இருக்காது. இருப்பினும், ஒருபோட்டியின்போது ரோகித் சர்மாவிடம் நான் பேசினேன்.
நான் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், நீங்கள் போர்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என அவரிடம் கூறினேன்.
தொடர் இந்தியாவின் கையை விட்டு நழுவவில்லை. அதனால், நீங்கள் கடைசி போட்டியில் விளையாடியிருப்பீர்கள். அந்த சூழலில் போட்டியில் நீங்கள் விளையாடியிருக்க வேண்டும். சிட்னியின் சவாலான ஆடுகளத்தில் டொப் ஒர்டரில் நீங்கள் 35-40 ரன்கள் எடுத்திருந்தால் அந்த தொடர் சமனில் கூட முடிந்திருக்கலாம்.
ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. நானாக இருந்திருந்தால், ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார். அது என்னுடைய ஸ்டைல். அதனை ரோகித் சர்மாவுக்கு தெரியப்படுத்தினேன். இந்த விடயம் நீண்ட நாள்களாக எனக்குள் இருந்தது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனை ரோகித் சர்மாவிடம் கூறிவிட்டேன்
என ரவி சாஸ்திரி கூறினார்.