நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரபாடா, சொந்த காரணங்களுக்காக தனது தாயகமான தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி உள்ளார்.
‘தனது சொந்த காரணங்களுக்காக ரபாடா தாயகம் திரும்பி உள்ளார்’ என குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடி இருந்தார். கடந்த புதன்கிழமை அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இந்த சீசனுக்காக ரூ.10.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது குஜராத் அணி. 29 வயதான ரபாடா, மொத்தம் 82 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2017 முதல் டெல்லி கேபிட்டல்ஸ் (50 போட்டிகள்), பஞ்சாப் கிங்ஸ் (30 போட்டிகள்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (2 போட்டிகள்) விளையாடி உள்ளார். மொத்தம் 119 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். பஞ்சாப் உடனான ஆட்டத்துக்கு பிறகு, “இதை கிரிக்கெட் என்று சொல்லாதீர்கள் ‘பேட்டிங்’ என்று சொல்லுங்கள்” என விரக்தியில் அவர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.