திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க முடியவில்லை என்று நடிகர் பாலா கவலை தெரிவித்துள்ளார்.
ஷெரிஃப் இயக்கத்தில் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. இப்படத்தின் மூலம் பாலா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
‘காந்தி கண்ணாடி’ படத்தின் முதல் காட்சியினை படக்குழுவினருடன் இணைந்து ராகவா லோரன்ஸும் கண்டுகழித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பாலா பேசும் போது, “படம் வெளியாவதற்கு 3 நாட்களுக்கு முன்பு பாரிய சிரமங்களை எதிர்கொண்டோம். நிறைய திரையரங்குகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க முடியவில்லை.
மக்கள் திரையரங்குக்கு வந்துவிட்டு இங்கு ‘காந்தி கண்ணாடி’ ஓடவில்லை போலிருக்கிறது என சென்று விடுகிறார்கள். அனைத்து தடைகளையும் தாண்டி படம் வெளியாகி இருக்கிறது. இன்று மக்களிடையே படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்கு தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.