திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார் கவிபேரசரர் வைரமுத்து. ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் திருக்குறளுக்கான விளக்க உரை இன்று வெளியாகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கும் நிலையில், இந்த நூலை முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிடுகிறார். முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிலையில், வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் வெளியீட்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞர்
கருணாநிதியின் நினைவிடத்தில் வைரமுத்து நூலை வைத்து பூத்தூவி மரியாதை செலுத்திய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.
முத்தமிழறிஞரே! முதல் தமிழாசானே! வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை உங்கள் நினைவிடம் சேர்க்கிறேன்: நெஞ்சு நிறைகிறேன். அப்பாவின் சட்டையை அணிந்துகொள்ள ஆசைப்படும் குழந்தையைப் போல நீங்கள் உரை எழுதிய குறளுக்கு நானும் எழுதியிருக்கிறேன். உரையாசிரியர் பட்டியலில் சேர்வதைவிட உங்கள் வரிசையில் சேர்வதில் உள்ளம் கசிகிறேன் வணங்குகிறேன்; என் பிறந்த நாளில் வாழ்த்துங்கள் என்னை” என பதிவிட்டுள்ளார்.