தமிழ் சினிமாவில் சுமார் 7 வருட காலமாக பாடாதிருக்கும் சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் டி இமான் சின்மயியை தனது படத்தில் பாட வைத்துள்ளார்.
அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாடகி சின்மயிக்கு டி. இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “என்றும் ஆன்மாவைத் தொடும் சின்மயியின் குரலில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன் என்று இமான் பதிவிட்டுள்ளார்.
2018ம் ஆண்டு இவர் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் முறைப்பாடொன்றை கூறியிருந்தார். இது சினிமா வட்டாரங்களில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து வைரமுத்துவிற்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகள் குறைந்தது.
சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால் அவர் தமிழ் மொழியில் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டதோடு பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அண்மையில் ‘முத்த மழை’ என ஆரம்பிக்கும் ரஹ்மானின் பாடலை தக் லைஃ பட இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியதை தொடர்ந்து அவருக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.