சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வரும் 15-ம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் என பிரிவு வாரியாக வெளியாகும். அதை அடிப்படையாக கொண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்வார்கள்.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் உள்ளே? ஜடேஜா வெளியே? – இந்தச் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டிரேடிங் முறையில் ஜடேஜாவையும், சஞ்சு சாம்சனையும் மாற்றிக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சஞ்சு சாம்சனை விடுவிக்க கூடுதலாக சிஎஸ்கே அணியில் இருந்து ஒரு வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் திறன் படைத்தவர். அவர் சிஎஸ்கே அணியில் வரும் பட்சத்தில் ‘தோனிக்கு என்ன ரோல்?’ என்ற கேள்வியும் எழுகிறது. இதேபோல மற்ற அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை வரும் 15-ம் தேதி வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
hindutamil

