செம்மணி புதைகுழிக்கு உரிய விசாரணை வேண்டும் என யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது பெரும் மன வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “செம்மணியிருந்து 60 க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவை எச்சங்களாக காணப்படுகின்றன. இவ்வாறு நடந்திருக்கும் மனித அவலத்தை எங்களுடைய அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
இறந்த ஆத்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் அது குறித்த விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டும். காலம் தாழ்த்தட்டிருந்தாலும் அவர்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பது எங்களுக்கு கடுமையான வேதனையை தருவதாக அமைந்திருக்கிறது.
அரசாங்கம் சார்பில் எவரும் இது குறித்து கரிசனை காட்ட தயங்குவதன் காரணம் என்னவென்பது கேள்விக்குரியாக அமைந்திருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் ஏனய சர்வதேச சட்ட கட்டமைப்புக்களுடனும் இது குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
இதன் விசாரணை நிலைப்பாடுகள், மரணத்திற்கான காரணம், கொலையா தற்கொலையா அது ஏன் நடந்தது என்ற வகையில் ஆராய்கிறோம். பாடசாலை மாணவி கொல்லப்பட்தை சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் அடையாளமாக காண்கிறோம். சட்டம் உறுதி செய்யப்பட வேண்டும். நீதிக்கான விசாரணைகளும் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். அவை மக்களுக்கு வௌிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
இங்கு நடந்த தவறுகளுக்குரிய தண்டனைகள் வழக்கப்படும் பட்சத்தில் மாத்திரமே விசாரணைகள் முழுமைப்படும். பாரபட்சம் அற்ற முறையில் இதன் பின்னணியிலிருக்கும் உண்மைகளும் வௌிப்படுத்தப்ப வேண்டியது அவசியம். நாட்டில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” என வலியுறுத்தினார்.