19.6 C
Scarborough

சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

Must read

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றிபெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்துள்ளது.

இப்போட்டியில் சென்னை தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்கள்:-

ராஜஸ்தான் வீரர் நிதிஷ் ராணா அதிரடி;

முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் அணியின் நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார்.

சென்னை தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டம்:

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரிலேயே ரச்சின் ரவிந்திரா ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார்.

பவர்பிளேயில் மோசமான பேட்டிங்:

பவர்பிளே ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திரிபாதியின் ஆட்டம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் திரிபாதி தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். நேற்று நடந்த ஆட்டத்தில் அவர் 19 பந்துகளில் 23 எடுத்த நிலையில் அவுட் ஆனார். திரிபாதியின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படாதவரை சென்னை அணியின் தொடக்க பாட்னர்ஷிப் அமையாது.

திரிபாதிக்கு பதில் கொன்வே அணியில் களமிறக்கப்பட்டால் அணியில் சற்று முன்னேற்றம் ஏற்படலாம்.

மிடில் ஓடர்:

மிடில் ஓடரில் கேப்டன் ருதுராஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், விஜய் சங்கர், ஷிவம் துபே போன்ற வீரர்கள் பொறுப்பை உணர்ந்து சரிவர விளையாடவில்லை.

டோனி, ஜடேஜா ஆட்டம்;

சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. அணி வெற்றிபெற 4 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், டோனி மற்றும் ஜடேஜா நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இரு வீரர்களின் நிதான ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

17 மற்றும் 18வது ஓவர்களில் இரு வீரர்களும் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சந்தீப் சர்மா வீசிய 17வது ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்தனர். இதனால் 3 ஓவரில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சென்னை தள்ளப்பட்டது.

18வது ஓவரை தீக்சன வீசினார். அந்த ஓவரில் டோனி அதிரடியாக ஆடவில்லை. 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சென்னை அணியின் தோல்வி இந்த ஓவரில் கிட்டத்தட்ட உறுதியாகியது. பினிஷர் ரோலில் களமிறங்கிய டோனியின் ஆட்டம் மிகவும் மோசமாகவே இருந்தது.

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை

சென்னை வெற்றிபெற கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டோனி முதல் பந்திலேயே பிடிகொடுத்து அவுட் ஆனார். பினிஷர் ரோலில் களமிறங்கிய டோனி 17 மற்றும் 18வது ஓவர்களில் மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால், கடைசி ஓவரில் வெற்றிபெற அதிக ரன்களை அடிக்க வேண்டியிருந்தது. ஆனால் முதல் பந்திலேயே அவர் கேட்ச் மூலம் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

கடந்த ஆட்டத்தின்போது 9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய டோனி முக்கிய கட்டத்தில் அதிரடியாக ஆடாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஓவர்டன் 4 பந்துகளில் 11 ரன்கள் குவித்தார்.

வெற்றிபெறும் முனைப்பு;

சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெறும் முனைப்பில் ஆடவில்லை என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த போட்டியிலும் அதே நிலை நீடித்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பவர் ஹிட்டர்:

சென்னை அணியில் கடைசி ஓவர்கள், முக்கிய கட்டங்களில் ரன்களை அதிரடியாக ஆடக்கூடிய பவர் ஹிட்டிங் வீரர்கள் இல்லாத நிலை நிலவுகிறது.

டோனி மீதான விமர்சனம்

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின்போதும், நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது டோனி சரிவர விளையாடவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அணியின் வெற்றிக்கு பதில் டோனி களத்தில் இறங்கி சிக்சர்கள், பவுண்டர்கள் மட்டும் அடித்தால் போதும் என்று சில ரசிகர்கள் எண்ணும் போக்கு நிலவுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இதே நிலை நீடித்தால்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் இதே நிலையில் நீடித்தால் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பே இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

முக்கிய கட்டங்களில் டோனி போன்ற வீரர்கள் முன்வரிசையில் களமிறங்கி அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திலால் மட்டுமே அணியின் வெற்றி உறுதியாகும். மாறாக முக்கியமான ஓவர்களில் குறைவான ரன்களை எடுத்துவிட்டு கடைசி ஓவர்களில் வெற்றிபெற முயற்சிப்பது ஏமாற்றத்தையே அளிக்கும் என விமர்சனம் எழுந்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article