சூடானில் எல்-ஃபாஷரில் ஒரு கொடிய ட்ரோன் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் டார்ஃபர் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தாக்குதல் பிராந்தியத்தில் வேகமாக மோசமடைந்து வரும் நிலைமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
அரசாங்க ஆதரவு பெற்ற இராணுவப் படைகள் (SAF) மற்றும் 2023 முதல் SAFக்கு எதிராகப் போராடி வரும் ஒரு துணை ராணுவக் குழு (RSF) ஆகியவற்றின் மோதலால் சூடான் நாட்டில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று சூடானின் மசூதி மீது நடந்த தாக்குதலில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் மோதலுக்கு நிலையான தீர்வைக் கண்டறிய பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் காரணமாக அந்நாட்டின் 12.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் உணவு மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த மோதலில் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது, பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

