கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ஓட்டங்களை பெற்றுள்ளார். மொத்தமாக இந்த தடவை 8 இன்னிங்ஸில் விளையாடிய சுப்மன் கில் 3 அரைசதம் உட்பட 305 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
கடந்த தடவை போல் அல்லாமல் இந்த தடவை சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் களத்தில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.
குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2-இல் வென்றால் கூட குஜராத் அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் தலைமைத்துவத்தில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதாக சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் நிதானமாக நேரம் எடுத்து அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்தார். தற்போது சுப்மன் கில்லால் அதிரடியாக விளையாட முடிகிறது.
அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சக வீரர்களுடன் அவர் தனது தேவையை சிறப்பாக சொல்வதுதான். அவர் களத்திற்கு வெளியிலும் நல்ல உறவுடன் இருப்பதே குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. களத்தடுப்பில் தொடர்ந்து மாற்றுவதோடு, பந்துவீச்சாளர்களுடன் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
கேகேஆர் அணிக்காக விளையாடிய போது , சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக திரும்பி இருக்கிறார். இந்த இடம் அவருக்கு சிறப்பானதாகும். என்று ரெய்னா கூறினார்.