ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு மிகக் குறைவாக உள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் சில உறுப்பு நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது.
இது உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும், பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.
ரஷ்ய எண்ணெய் மீதான நேட்டோவின் தடை மற்றும் சீனா மீதான வரிகள்தான் இந்தக் கொடிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பெரிதும் உதவியாக இருக்கும். ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர, சீனா மீது 50% முதல் 100% வரை வரிகளை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும்.
ரஷ்யா மீது சீனா வலுவான பிடியை கொண்டுள்ளது. எனவே, சீனா மீது விதிக்கப்படும் கடுமையான வரிகள், அந்தப் பிடியை பலவீனப்படுத்தும். அனைத்து நேட்டோ நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டு, அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்போது, ரஷ்யா மீது பெரிய பொருளாதார தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.