சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். இதனை டான் பிக்சர்ஸ் தயாரிக்க படப்பூஜையும் நடைபெற்றது. இதில் சிம்புவுக்கு நாயகியாக கயாடு லோஹர், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள்.
பின்பு சில நாட்களில் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ‘பார்க்கிங்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, விரைவில் இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது வென்றிருப்பதைத் தொடர்ந்து ராம்குமார் அளித்த பேட்டியில் சிம்பு படம் எப்போது தொடங்கும் என்று பேசியிருக்கிறார்.
சிம்பு படம் குறித்து ராம்குமார் கூறும்போது, “கதை விஷயத்தில் எந்தவொரு சமரசமும் இருக்கக் கூடாது என்று சிம்பு அறிவுறுத்தி இருக்கிறார். ஆகையால் இப்படம் தொடங்க சில காலமாகும். இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். அதில் சிம்பு சார்ந்த விஷயங்களுடன் எனது விஷயங்களும் அடங்கியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.