அரசியல் காரணங்களுக்காக அன்றி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத வணிகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால்,ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார் என காவல்துறை மா அதிபர் (IGP) சி.டி. பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆரம்ப விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அத்தகைய தரப்பினர்களுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு தற்காலிக பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
“எம்.பி. விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, ஆனால் இது அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பிரச்சினை அல்ல. பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களுடனும் சட்டவிரோத நடவடிக்கைகளுடனும் அவர் கடந்த கால தொடர்புகளை கொண்டிருந்ததை புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன,”
இந்த வார தொடக்கத்தில், தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது தன்னை குறிவைத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக ஜகத் விதான நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அவரது பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதேவேளை அச்சுறுத்தலின் மூலத்தை சரிபார்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணவும் மேலும் விசாரணை இடம்பெற்று வருவதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

