மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
2025-ம் ஆண்டில் ஷுப்மன் கில் 5 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் கிரிக்கட் அணித்தலைவராகபொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய வீரர்களில்அணி தலைவராக விராட் கோலி கடந்த 2017 மற்றும் 2018-ல் தலா 5 சதங்களை விளாசியிருந்தார்.
இதன் முலம் ஒரே கலண்டர் ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய அணி தலைவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
அணி தலைவராக ஷுப்மன் கில் 12 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்துள்ளார். அணி தலைவராக குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர்களில் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் (9 இன்னிங்ஸ்கள்), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (10 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
அதேவேளையில் போட்டியை கணக்கிட்டால் ஷுப்மன் கில்லும், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டான் பிராட்மேனும் தலா 7 போட்டிகளில் அணி தலைவராக செயற்பட்ட அதேவேளையில் 5 சதங்களை அடித்துள்ளனர். அலாஸ்டர் குக் 5 போட்டிகளிலும், கவாஸ்கர் 6 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது ஏழு முறையாவது தங்கள் அணிகளை வழிநடத்தியவர்களில் அதிக சராசரியை டான் பிராட்மேன் (101.51) வைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை அணி தலைவராக ஷுப்மன் கில் பிடித்துள்ளார். அவரது சராசரி 84.81 ஆக உள்ளது.

