தேர்தல் மேடையில் இடதுசாரி கொள்கைகளை முன்வைத்த அரசாங்கம், தற்போது எந்தவொரு கலந்துரையாடலுமின்றி பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால், அவை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் தற்போது எவ்வித இணக்கப்பாடும் இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, அவ்வாறு தன்னிச்சையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.
எனது பேச்சுரிமையை நாடாளுமன்றத்தில் பறித்தாலும், நான் இதை பேசுவேன். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முற்றிலும் மீறியுள்ளது என வலியுறுத்தியுள்ளார்.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்கான விதைகள், உரங்கள், இரசாயனங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்த வேலைத்திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த போதும் , மக்களின் ஆணை கிடைக்கவில்லை எனவும், தற்போதைய அரசாங்கம் விவசாயிகளை கவனிக்கவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.