ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் டீசர் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171ஆவது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இப்படத்தில் இடம்பெறும் குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் முடிவடையும் என்றும் ஜூன் மாதம் முதல் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் என்றும் தெரிய வந்துள்ளது.
கூலி திரைப்படத்தை மே மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
மேலும், மார்ச் 14 அன்று கூலி டீசர் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுவும் ஏப்ரல் 14 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.