மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை சென்றடைந்துள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் நேற்று மாலை 6.00 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னாரில் போராட்டத்தை முன்னெடுத்து வருவோர் வரவேற்றனர்.
இதனை அடுத்து தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக சென்றதோடு காற்றாலை அமைப்பதற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கடந்த புதன்கிழமை,முள்ளிவாய்க்காலில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணத்தை (10) ஆரம்பித்தனர்.
அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக சென்றதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.