அமெரிக்கா-கனடா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் காரணமாக சுற்றுலா நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா சேவை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விக்டோரியா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சியாட்டில், மற்றும் வாஷிங்டன் இடையே பயணிகளை அழைத்து வரும் FRS கிளிப்பர் படகு நிறுவனம் போன்றவை இவ்வாறு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளன.
“இந்த வகையான எல்லை தாண்டிய பதற்றம் காணப்படும் போது முதலில் பாதிக்கப்படும் வணிகங்களில் எல்லை தாண்டிய சுற்றுலா சேவைகளும் அடங்கும் என FRS படகு சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது படகு பயணிகளது எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.
எனினும் பயணங்கள் முற்றாக முடங்கி விடவில்லை என பிரிட்டிஷ் கொலம்பியா சுற்றுலா தொழில் சங்கத்தின் தலைவர் வால்ட் ஜூடாஸ் குறிப்பிட்டுள்ளார்.
“கோடை முழுவதும் இந்த நிலை தொடர்ந்தால் அது எமக்கு வருத்தமளிக்கும் விடயமாகும் எனவும் அமெரிக்கர்களது வருகையில் இன்னும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.