17.8 C
Scarborough

கடைசி வரை போராடிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து

Must read

இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா களத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சவால் கொடுக்கும் வகையில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 387 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இந்தப் போட்டியில் கடைசி மற்றும் 5-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை இருந்தது. இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி இருந்தது. இந்த நாளில் மதிய உணவு நேர இடைவேளைக்கு முன்பு ரிஷப் பந்த் 9, கே.எல்.ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 0, நித்திஷ் குமார் ரெட்டி 13 ரன்களில் இங்கிலாந்து பவுலர்கள் அவுட் செய்தனர். அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 39.3 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து வெற்றிக்கு மேற்கொண்டு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது.

9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா மற்றும் பும்ரா 132 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தனர். பும்ரா 54 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷார்ட் பால் வீசி பும்ராவை இம்சித்தார் ஸ்டோக்ஸ். மேலும், பஷீரும் ஸ்டோக்ஸும் மாறி மாறி ஒரு ஸ்பெல்லை வீசினர். இதில் பஷீரின் சுழலை ஜடேஜா மற்றும் பும்ரா ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தனர். உடனடியாக பஷீருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளரான பிரைடன் கார்ஸை பந்து வீச செய்தார் ஸ்டோக்ஸ். மறுமுனையில் அவரே வீசினார். அதன் பலனாக பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார்.

ஜடேஜா அரை சதம்: 150 பந்துகளில் அரை சதம் எடுத்தார் ஜடேஜா. இந்த இன்னிங்ஸில் அவரது ஆட்டம் மிகவும் பொறுப்பானதாக இருந்தது. இந்த தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்களை அவர் பதிவு செய்தார். இந்த முறையில் பேட்டை வாள் போல சுழற்றும் கொண்டாட்டம் எதையும் ஜடேஜா மேற்கொள்ளவில்லை. இந்திய அணி மிகவும் மெதுவாக இலக்கை நெருங்கி கொண்டிருந்த சமயம் அது.

பின்னர் சிராஜ் உடன் இணைந்து மீண்டும் இன்னிங்ஸை கட்டமைத்தார். சிராஜை பாடி-புளோ பாணியில் அட்டாக் செய்தனர் இங்கிலாந்து பவுலர்கள். இறுதியில் பஷீர் சுழலில் சிராஜ் பவுல்ட் ஆனார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 22 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

இந்த தொடரின் நான்காவது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஜடேஜா 181 பந்துகளில் 61 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக யாராவது ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நின்றிருந்தால் முடிவு மாறி இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article