ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த வருடம் மார்ச் 15-ம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில் விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு கமல்ஹாசனுக்கு ஓஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது.
ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும் விழாவின் விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு, ஜனவரி 12 முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும். அதற்கான பரிந்துரைகள், ஜனவரி 22 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில், விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு கமல்ஹாசனுக்கு ஓஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, ‘காஸ்டிங்’ இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 534 திரைக்கலைஞர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால் ஓஸ்கர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும் அதில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,143-ஆகவும் உயரும். ஓஸ்கர் அகடமியில் உறுப்பினர் ஆவதற்கு அழைக்கப்படுவது திரைத்துறையில் கௌரவமாகக் கருதப்படுகிறது.
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஏற்கனவே ஒஸ்கார் விருதுகள் பெற்றுள்ள நிலையில் ஒரு தமிழ் கலைஞன் பெற்ற ஒரே விருதாக அது கருதப்படுகிறது.