ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அந்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சபையின் தலைவருமான கமல் கர்ராஸி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.
இம்மாத ஆரம்பத்தில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கமல் கர்ராஸி பலத்த காயமடைந்தார்.
சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கமல் கர்ராஸி 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஈரானின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றினார்.
ஈரானின் மூலோபாய வெளிநாட்டு உறவுகள் சபையின் தலைவராகச் செயல்பட்டதுடன், நாட்டின் மிக உயரிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

