22.5 C
Scarborough

இளையராஜாவை கொண்டாடி தீர்க்கும் பண்ணைப்புரம் கிராம மக்கள்!

Must read

உத்தமபாளையம்: சிம்பொனி மூலம் இசையில் உலக சாதனை செய்த இளையராஜாவை அவரது சொந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். உள்ளூர் கோயில் திருவிழாவில் அவருக்கு பாராட்டி விழா நடத்தவும், சிறப்பிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தனது வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் சர்வதே அளவில் சிம்பொனியை அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் துபாய், பாரீஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சிம்பொனி இசை நிகழ்ச்சியையும் நடத்த உள்ளார்.

இந்திய இசையில் இருந்து உலக இசையின் சிகரத்தைத் தொட்ட அவரை பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக உலக அளவிலான அவரது ரசிகர்கள் இதனை பெருமையுடன் சிலாகித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு விழா நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

உலக சாதனை செய்த இளையராஜாவை அவர் பிறந்த ஊரான பண்ணைப்புரத்தில் கிராம மக்கள் பெருமையுடன் பாராட்டி வருகின்றனர். இதற்காக பல்வேறு இடங்களிலும் இவரை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் உள்ளூர் திருவிழாவில் அவரை கவுரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (79) என்பவர் கூறுகையில், “அவரால் இந்த கிராமமே பெருமைப்படும் அளவுக்கு சாதனை செய்துள்ளார். இசை, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த பின்னணியும் இல்லாமல் இன்றைக்கு பிரமாண்டமான இடத்தை தொட்டுள்ளார். மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

அருணா என்பவர் கூறுகையில், “ஏற்கெனவே இசையால் பலரையும் மகிழ்வித்த இளையராஜா இன்றைக்கு உலக அளவில் சாதனை நிகழ்த்தி உள்ளார். சொந்த ஊர் திருவிழாவில் இசை கச்சேரி நடத்தி உள்ளார். திருவிழா உள்ளிட்டவற்றுக்கும் நிதி உதவி வழங்குவார்” என்றார்.

இசைஞானி இளையராஜா கலை இலக்கிய நற்பணி மன்ற தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், “வைகை அணை கட்டும் போது மண் சுமந்தும், ஏலக்காய் தோட்டங்களில் கூலி வேலை செய்தும் சிறிய வயதில் சிரமப்பட்டார். அப்போதே குடம், பிளாஸ்டிக் டப்பாக்களில் குச்சியால் தட்டி பாட்டு பாடுவார். பிறகு கம்யூனிஸ்ட் பிரச்சார பாடல் குழுவில் சேர்ந்து திரைப்பட இசைக்குள் சென்று விட்டார். அன்னக்கிளி, பத்திரகாளி, கவிக்குயில் உள்ளிட்ட அவரது ஆரம்ப கால படப் பாடல்களை இக்கிராம மக்களுக்கு இசைத்தட்டு மூலம் ஒலிக்கச் செய்து மகிழ்விப்பார்” என்றார்.

இந்தக் கிராமம் முழுவதும் தற்போது இளையராஜா குறித்த பேச்சாகவே உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளூர் கோயில் திருவிழாவுக்கு அவரை அழைத்து பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article